எப்போதைக்குமானது
*********************************
ஒழுங்கற்றிருப்பதால்
“பாறை”யொன்று மலை மீது
நுனி வாலூன்றி நிற்கிறது
ஊரெல்லைக்
காவல் தெய்வம் போல்…
அது பாறைக்கான
ஒழுங்கிலேயே
ஒன்றி நிற்கிறது சிலை போன்று
ஒழுங்கற்ற ஒழுங்கில்
நிற்கும்
பாறையைச் செதுக்கி
ஒழுங்கான சிலை ஒன்றைக் கண்டெடுப்பவன்
சிற்பி எனப்படுகிறான்
ஒழுங்கற்றிருந்ததை
ஒழுங்குறச் செய்து
“மரபெ”ன்றான் ஒருவன்
ஒழுங்குற்றதை
ஒழுங்கறச் செய்து
“புதிது”என்றான் ஒரு புதியவன்
ஒழுங்கற்ற ஒழுங்கில்
இயங்கும் ஒன்றை
புதிய ஒழுங்கினுள்
புகுத்தி “நவீனம்” என்கிறான்
நவீனன்
இங்கே…இவனது
இரசனையும்
ருசியும்
ஒரு காஃபிக் குவளையிலிருந்து
எழும் வடிவற்ற வடிவான
ஆவி போலும்
காற்றின் போக்கில் அளவாளவுகின்றன
ஒழுங்கிலாது உலா வரும்
மனமும் கூட
ஏதோ ஒரு ஒழுங்கையே நாடிச் செல்கிறது
எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தியாயிற்று
என
உட்காரும் தருணத்தில்
உருவெடுக்கும் அதிர்வொன்றில்
ஒழுங்குகளெல்லாம்
சிதறி ஒழுங்கற்றதாகிச் சிரிக்கின்றன
ஒழுங்கற்ற ஒழுங்கின் ஒழுங்கின்மையே
சுழற்றுவிக்கும் சூட்சுமமாய்ச்
சுழன்று கொண்டிருக்கிறது
பூமியைச் சுற்றிலும்
ஒழுங்கிலில்லை
ஒழுங்கின்மையிலும் இல்லை
ஒழுங்கற்ற ஒழுங்கின்
ஒழுங்கின்மையிலேயே
ஒய்யாரமாய்ச் சுழன்று
கொண்டிருக்கிறது
உள்ளங்கையில் ஒளிரும் புது உலகம்
No Comments